Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Monday, May 22, 2006

வருந்தி அழைத்தால் வருவது மழையாகுமா?

மழைப்பிரார்த்தனைகளில் எனக்கு
சம்மதம் இல்லை
வருந்தி அழைத்தால் வருவதன்
பெயர் எப்படி மழையாகும்?

நன்றி: குமுதம்.

"மழை"


மழையைப் பிடிக்காத மனிதன் இருக்க முடியுமா இவ்வுலகில்? மழையை நினைத்தாலே ஒரு சுகந்தம் வந்து மனதோடு ஒட்டிக்கொள்ளும். மனது ஒரு குழந்தையைப்போல குதூகலிக்கும். குளிர்தென்றல் தாலாட்ட, மண் வாசனை வரவேற்க நம்மை வந்து சேரும் மழைக்காக வேண்டுவது தவறில்லை. எப்படி அழைத்தால் என்ன வரப் போகிறது, வந்து போவது மழையின் சுகந்தம், பலரின் வாழ்க்கை. இக்கவிதையைப்போல மழையை வருந்தி அழைக்க எனக்கு வறுத்தம் இல்லை. ஆனால் இந்த கவிதையில் வருந்தி அழைக்கப்படும் மழையைப் பற்றி மட்டும் பேசுவது போல தெரியவில்லை. எந்த செயலும் இயற்கையாக இருக்க வேண்டும் என்றே இந்த கவிதை மறைமுகமாக சொல்வதாக நான் உணர்கிறேன்.


காதல்:
-----

"குளிர் பார்வை பார்த்தால் கொடியோடு வாழ்வேன்
எனை தாண்டி போனால் நான் வீழ்வேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன்"

-- நன்றி வைரமுத்து


"வான் மழை விழும் போது மலை கொண்டு காத்தாய்

கண் மழை விழும் போது எதை கொண்டுக் காப்பாய்

பூவின் கண்ணீர் ரசிப்பாய்
நான் என்ன பெண் இல்லையா"

--நன்றி வைரமுத்து

காதலன் குளிர் பார்வைக்கு ஏங்கலாம். காதலன் பேச்சுக்கு மயங்கலாம். அவன் சொல்லுவது எல்லாம் கேட்கலாம். கொஞ்சிப் பேசி அவன் உயிரை கொள்ளைக்கூட கொள்ளலாம். அன்பால் அவனை அள்ளி எடுக்கலாம். இதெல்லாம் அவனும் உன்னை விரும்பி ஏற்கையில் செய்யடி பெண்ணே. மண்ணில் வீழ்ந்த பின்னும் மன்றாடுவேன் என்றால் பின் உன் சுயம் எங்கே? உன் கண்ணீரை ரசிப்பவன் கண்ணனே ஆனாலும் அவன் உனக்கு வேண்டாம். உன் வீட்டு தோட்டத்தின் மல்லிகை மொக்குகளை நேசிக்கலாம். உன் வீட்டு நாய்குட்டியை நேசிக்கலாம். எங்கும் நிறைந்த தென்றலை சுவாசிக்கலாம். இயற்கையின் அற்புதத்தை ஆழ்ந்து ரசிக்கலாம். யாரிடமும் யாசித்து நேசம் பெற வேண்டாம்.

"மன்றாடி பெற்றால் அது எப்படி காதலாகும்?"

நம்பிக்கை
-------

அந்த காலத்தில் மக்கள் யாவரும் கூட்டம் கூட்டமாகதான் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு பெண் ஒரு தெய்வம். பெண்ணின் தாய்மை வரத்தினால் அவள் கடவுளுக்கு நிகராக வணங்கப்பட்டாள். பிறகுதான் தனக்கும் அதில் பங்கு உண்டு என்ற அறிவை பெற்றான் ஆண். அதன் பின் வாரிசு என்ற வழக்கு வந்தது. தன் பிள்ளைக்கு தான் தான் அப்பன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான். அதன் விளைவே பெண்ணுக்கு கற்புநெறி கற்பிக்கபட்டது. ஆண் ஆதிக்கம் வளர்ந்தது. சீதை தீக்குளித்து தன் கற்பை நிரூபிக்கவேண்டி வந்தது. கண்ணகி மதுரையை எரித்து தன் கற்பின் சக்தியை உலகுக்கு காண்பித்தாள். வாசுகி சொல்லி வான் பொழிந்து அவளது கற்பின் வலிமையை காட்டியது.. ஏதோ ஒரு தேவனின் பிம்பம் அழகாக இருக்கின்றது என்று நினைத்த பரசுராமரின் அன்னை தன் மகனாலேயே கொல்லபட்டாள். காரணம் அவள் மணலால் செய்த பானை அவள் கற்பு போல் கரைந்தது. சகுந்தலைக்கோ தன்னை மனைவி என்று துஸ்யந்தனிடம் நிருபிக்க ஒரு மோதிரத்தின் துணை தேட வேண்டி இருந்தது. இப்படி பெண்களுக்கு எத்தனை எத்தனையோ சோதனைகள். கணவன் வீடு திரும்பும் போது மனைவி வீட்டில் இருக்கவேண்டும் என்பது மட்டுமல்லாமல் நாள் முழுதும் அவள் அங்கே தான் இருந்தாள் என்ற நம்பிக்கை கணவனுக்கு வரவேண்டும். நம்பிக்கை தானே வாழ்கையின் ஆதாரம். கற்பென்பதும் ஒரு நம்பிகை தானே?



"நிருபித்து பெறுவது எப்படி நம்பிக்கையாகும்?"


தானம்
-----

மஹாபாரதத்தில் கர்ணனின் பாத்திர படைப்பைப் போல வஞ்சிக்கப்பட்ட படைப்பு வேறு எதுவும் இருக்க இயலாது. அவன் பிறந்ததே குந்திதேவி தான் பெற்ற மந்திர சக்தியை சோதனை செய்ததன் விளைவு. பிறந்ததும் தாயே அவனை கை விடுகிறாள். தந்தையாய் சூரியன் தன் புத்திரனுக்கு எந்த கடமையையும் செய்யவில்லை. பாண்டவர் நாட்டை ஆளும் முதல் தகுதியுள்ள கர்ணன் தேரோட்டி மகனாய் பட்ட அவமானங்கள் கோடி கோடி. அவனுக்கு அமைந்த நட்பை தவிற அவனுக்கு வேறு என்ன கிடைத்தது? தருமத்தில் தலை சிறந்தவன். கொடுத்துக் கொடுத்து கை சிவந்தவன். கடவுளும் கூட அவனை தாய், தந்தைக்கு அடுத்தபடியாக வஞ்சிக்கின்றான். உயிர் காக்கும் கவசத்தை தானமாக பெற்றான் இந்திரன். தலையை காக்கும் தருமத்தை தானமாக பெற்றான் கண்ணன். கர்ணனின் கதையை பார்க்கும்போது என் மனத்தில் எழும் ஆழமான கேள்வி இது.


"கேட்டு(வஞ்சித்து) பெறுவது எப்படி தானமாகும்?"
"அநீதி செய்து நிலை நாட்டியது எப்படி தருமம் ஆகும்?"

இரண்டாவது கேள்வி இக்கட்டுரைக்கு சற்றே பொருந்தாது என்றாலும் என் மனதில் ஏனோ வந்த சிந்தனையது.

கட்டுரை ஆசிரியர்
லாவண்யா

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4