மழை
-லாவண்யா இது தான் என் கவி சிந்தனையில் முதற்கல்.
அப்படி சொன்னால் அதன் ஆழம் உங்களுக்கெல்லாம் புரியாது.
அப்போதெல்லாம் எனக்கு கவிதை பற்றிய சிந்தனை மிக குறைவு. சிந்திக்கவே தெரியாது என்று கூட சொல்லலாம்.
அது ஒரு மென்மையான நட்பு. எனக்கு கவிதையை எப்படி ரசிக்க வேண்டும் என்று சொல்லி தந்தது அந்த நட்பே ஆகும்.
நானும் எனது நண்பனும் ஒரு முறை மூன்று சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தோம். ஏதோ பேச்சினிடையே
அவன்: "இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு குமுதத்தில வந்து இருந்த மழை பத்தின கவிதைகளை படிச்சிருக்கியா?"
நான்: படிச்சிருக்க மாட்டேன் சொல்லு.
அவன்: "இலைகளற்ற
இந்த கோடையில் நீ
வந்து போனதை
எந்தப் பூ பூத்து கொண்டாடுவது?"
நான்: இது எதோ மரம் சொல்லாறது போல இல்ல இருக்கு....
அவன்: மரம் சொல்லறது போல அந்த கவி சொன்னது இது. தனிமையிலெ ஏங்கிகிட்டு இருந்த எனக்கு நீ கூட இருக்கறது ஒரு வித சந்தோசம்.
வார்த்தையால சொல்ல முடியாத பரவசம்....
அவன் "Man of few words" அவன் அப்படி சொன்னதும் மீண்டும் எனக்குள் சொல்லிப் பார்தேன்.
"இலைகளற்ற
இந்த கோடையில் நீ
வந்து போனதை
எந்தப் பூ பூத்து கொண்டாடுவது?"
சட்டென ஞானம் பிறந்ததுப் போல இருந்தது.
மீண்டும் யோசித்ததில் எனக்கு புரிந்தது... அது ஒருவித சந்தோசம் எப்படீன்ன...
நான் ஊருக்குப் போகிற ஒவ்வொரு முறையும் அம்மாவிடம், அக்காவிடம், தொழியிடம் நிறைய பேசுவேன். அந்த பேச்சு ஏதோ ஒரு
தொடர் வண்டியில் வேகமாகப் போகிற போது, எதிரே கடக்கும் மரம்,செடிகள்,மனிதர்கள்,பூக்கள் .... இது போல எதையும் முழுமையாக
பார்ப்பதற்குமுன் அடுத்த இடம் பார்வைக்கு வந்துவிடுவது போல, ஏதேதோ பேசுவோம் கவிதை,சினிமா,பாடல்,இசை இப்படி ஆனால் எதிலுமே
ஒரு முழுமை இருக்காது topic மாறிகிட்டே இருக்கும்.
இலைகளற்ற
இந்த கோடையில்
--- நேரம் மிக குறைவாக இருக்கும் இந்தவேளையில்
நீ
வந்து போனதை
எந்தப் பூ பூத்து கொண்டாடுவது?
---- உன்னிடம் எதை பேசுவது? எதை விடுவது?
மீண்டும் யோசித்ததில் எனக்கு புரிந்தது... அது ஒருவித சோகம் எப்படீன்ன...
ஒரு ஏழையின் வீடு, மகள் வந்து இருக்கிறாள் விடுமுறைக்கு,
இலைகளற்ற
இந்த கோடையில்
------- என்னிடம் பணமில்லாத இந்தவேளையில்
நீ
வந்து போனதை
எந்தப் பூ பூத்து கொண்டாடுவது?
------- என்ன வாங்கி கொடுத்து என் சந்தோசத்தை காட்டுவது.
மீண்டும் யோசித்ததில் எனக்கு புரிந்தது... அது ஒருவித சோகம் எப்படீன்ன...
ஒரு ஆண். அவனுக்கு அவன் மனைவியால் தொல்லை. ஒரு பெண். அவளுக்கு அவள் கணவன் தரும் கொடுமை. இருவரும் ஒரே அலுவலகம்
இருவர்க்கும் ஒருவரின் நிலை மற்றவருக்கு தெரியும். ஒத்த அலைவரிசை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும், காதல் என்றும்
சொல்ல முடியாது. ஆனால் சுழல்,
இலைகளற்ற
இந்த கோடையில்
------- மிக கொடுமையான இந்த காலத்தில்
நீ
வந்து போனதை
எந்தப் பூ பூத்து கொண்டாடுவது?
------- ஆறுதல் தரும் இந்த நட்பை உரிமை ஆக்கி கொள்ள முடியாத சோகம்.
இதை போல இன்னும் எத்தனையோ சிந்தனை.
ஒரு கவிதையைக் கேட்டு மரம் பேசுவதாக மட்டும் கண்ட நான், ஒரு நாவலே எழுதும் அளவிற்க்கு வளர்ந்தது மேலே சொன்ன கவி துளிப்பாவினால் தான்.